தமிழ் தேசியம் எனப்படுவது யாதெனில் . . .

தமிழ் மொழி தொன்மையானது.

முதற்சங்க காலமாக கூறப்படும் கி.மு 9600. முன்பிருந்து வழக்கிலிருந்ததா என்று இதுவரை கண்டறியப்படாதா போதிலும், குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையுடையது தமிழ் மொழி. மதுரை அருகே கீழடியில் கிடைத்த நாணயங்கள், பழனி அருகே பொருந்தலில் கிடைத்த தாழிகள் இதை உறுதி செய்கின்றன. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளில் இருக்கும் எழுத்துக்கள் தமிழ்-பிராமி என்று உறுதி செய்யப்பட்டாலே, தமிழ் மொழி 3800 ஆண்டுகள். தொன்மையானதாகீவிடும். குமரிக்கண்டம் மட்டும் நிரூபிக்கப்பட்டால், முதற்சங்க காலத்தையும் எட்டிவிடும் தமிழ் மொழி.

இந்தியநாட்டில் வழக்கிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழியே தொன்மையானது. தமிழில் பிறமொழி கலப்பின்று, ஆதி நாகரீகங்கள் பற்றியும் உரையாடலாம், நாளைய அறிவியலும் பேசலாம். நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் வளரும் போதிலும், தன் வேர்களை மறவாத மரமாய் வாழும் உன்னத மொழி தமிழ்.

ஆனால், இந்தத் தமிழ் மொழி மீது காதலும் பற்றும் கொண்டால், இன்றைய இந்திய அவனுக்களிக்கும் பெயர் இனவெறியன். தமிழ் தேசியம் பேசுபவனை பிரிவினைவாதி என்றும், தமிழர் உரிமைக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்றும் இன்றைய  இந்திய அழைக்கிறது.

தமிழ் தேசியவாதிகள் பிரிவினைவாதிகள் என்று கருதுவது சரியா? தமிழ் தேசியம் என்றால் என்ன? ஒரு சிறு பார்வை . . .


தமிழ் தேசியம் - வரலாறு:
தமிழ் தேசிய சிந்தனைக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது என்று கூறிவிட முடியாது. ஆனால், அது நேற்று பெய்த மழையில் மழையில் இன்று முளைத்த காளான் என்று புறந்தள்ளி விடவும் இயலாது. 1946ல், இந்திய விடுதலை போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், ம. பொ. சிவஞானம் அவர்கள் தொடங்கிய இலக்கிய அமைப்பான தமிழரசுக் கழகத்தில் உருவான தத்துவம் தான் தமிழ் தேசியம்.

1946 முதல் 1954 வரை காங்கிரசு கட்சிக்குள் கலை, இலக்கிய, கலாச்சார இயக்கமாக இயங்கி வந்த தமிழரசுக் கழகம், 1954ல் (தமிழரசுக் கழகத்தை கலைக்க காங்கிரசு உத்தரவிட்டதால்) தனி அரசியல் இயக்கமானது.

அந்த காலகட்டங்களில் வடவர்கள், இந்தியாவை ஒன்றிணைத்திட இந்தி வழிவகிக்கும் என்ற காந்தியின் கூற்றின் படி, இந்தியை இந்தியாவின் மொழியாக முன்னிறுத்த முயன்று கொண்டிருந்தனர். சாதி சமய வேறுபாடு, தீண்டாமைக்கெதிராக போராடிக்கொண்டிருந்த தென்னவர்களோ, இந்துக்களின் மொழியான இந்தியை எதிர்த்தனர். இந்தி திணிப்பு, அடிமைத்தனத்தையும், சாதி கட்டமைப்பையும் ஊக்குவிப்பதாக கருதிய அவர்கள், இந்தித் திணிப்பை அனுமதித்தால், திராவிட மொழிகள் ஒருநாள் அழியும் என்றும், ஆங்கில கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் இந்தி இடையூறாக நிற்கும் என்றும் கருதினர். அன்று வரை மொழிக்குடும்பமாக மட்டுமே இருந்த திராவிடம் (ராபர்ட் கால்டுவெல் என்பவர் வழங்கிய பெயர்), அரசியல் தத்துவமாக உருவெடுத்தது, அரசியல் இயக்கமாகவும் மாறியது. அன்று தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பொருளாதார சமத்துவத்திற்க்காக போராடியவர்கள் இந்த அரசியல் தத்துவத்தை ஏற்றுக்கொண்டதால், தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை திராவிடத்தின் அடையாளங்கள் ஆயின.

இந்திய தேசியம், திராவிடம் என்று இரண்டு தத்துவங்களும் தமிழர்க்கு உதவாது என்று எண்ணிய ம. பொ. சிவஞானம் அவர்களும் தமிழரசுக் கழகமும் முன்னெடுத்த தத்துவம் தான் தமிழ் தேசியம். இந்திய தேசியத்தின் ஒரு மொழிக் கொள்கைக்கும், திராவிடத்தின் தனி திராவிடநாடு கோரிக்கைக்கும் மாற்று நிலைப்பாட்டை கொண்டது தான் இந்த தமிழ் தேசிய தத்துவம். தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, தமிழர் அறம், தமிழர் இலக்கியம், தமிழர் வாழ்க்கை முறை, தமிழர் உரிமையை முன்னிருந்தி, "மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற தத்துவமே தமிழ் தேசியம்.

தனிநாடு கோரிக்கை அல்ல தமிழ் தேசியம். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு அவர்கள் வாழும்  தேசத்தில் சம-உரிமை வேண்டும் என்ற தத்துவமே தமிழ் தேசியம்.


தமிழன் திராவிடனா?
தமிழன் திராவிடனா என்று அறிவதற்கு முன், திராவிடம்  என்ற சொல் எதை குறிப்பிடுகிறது என்றறிவோம்.

திராவிடம் ஒரு மொழிக்குடும்பத்தின் பெயரா? 1856-ல், ராபர்ட் கால்டுவெல் என்பவர் "A comparitive grammar of the Dravidian or South Indian family of Languages" என்று ஒரு நூலை வெளியிடுகிறார். இந்த நூலில், தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் ஆகியவை ஒரு குடும்பத்தைச் .சேர்ந்தவை என்றும், இந்த மொழிகள் வடமொழியிலிருந்து தோன்றவில்லை என்றும் ராபர்ட் கால்டுவெல் கூறுகிறார். யார் இந்த ராபர்ட் கால்டுவெல்? கிருத்துவ மதத்தை இந்தியாவில் பரப்ப வந்த ஒரு ஆங்கிலேயர். மொழியாளருமான இவர், இந்தியா வந்தபின், தமிழையும் வடமொழியையும் கற்று, இம்மொழிகளின் இலக்கணத்தை ஆராய்ந்தவர். இவர்தான் தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு திராவிடமொழிக் குடும்பம் என்று பெயரிட்டார். திராவிடம்  என்ற சொல்லை அவர் பயன்படுத்த காரணமாக அவர் கூறும் நூல் தந்திர-வார்த்திகா.

மீமாம்ச (வடமொழி வேதங்களை அன்றி உண்மை ஏதுமில்லை என்ற தத்துவம்) சமயத்தை சார்ந்த குமரில பட்டர் என்பவர் தான் தந்திர-வார்த்திகாவின் ஆசிரியர். இவர் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இன்றைய காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்று கருதப்படுகிறது. மீமாம்ச சமயத்தை சார்ந்தவர்கள் வடமொழியை மட்டுமே தேவமொழியாக கருதிய காலத்தில், வேதம் கற்ற ஒருவர் வேதங்களை எந்த மொழியில் கூறினாலும் அதுவும் வேதத்திற்கு சமமானது என்ற  கூறியவர். இவர் பயன்படுத்திய "ஆந்திரா-திராவிட" என்ற சொல்லாடலை தெலுங்கயும் தமிழையும் குறிப்பதாகவும், குமரில பட்டரின் காலத்தில் தமிழுக்குள் மலையாளம் அடங்கியிருக்கும், தெலுங்குக்குள் கன்னடம் அடங்கியிருக்கும் என்றும் கால்டுவெல் கருதினார். தமிழுக்கும் தெலுங்குக்கு ஒற்றுமை இருந்ததை கண்டறிந்த அவர், இவை இரண்டும் ஒரே மொழியிலிருந்து தோன்றி இருக்கும் என்றெண்ணினார். அந்த மூல மொழியை திராவிடம் என்றழைத்தார். இதனால்தான் தமிழ் மொழிக் குடும்பம் என்று அழைக்கப்பட வேண்டிய மொழிகள், திராவிட மொழிக் குடும்பம் என்றழைக்கப்பட்டு வருகின்றன.

அது சரி, குமரில பட்டர் ஏன் தமிழை திராவிடம் என்றழைக்கிறார்? அதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

குமரில பட்டர் வாழ்ந்ததாகக் கருதும் காலம் தென்னிந்தியாவின் பக்தி காலம்.

சமணமும் பௌத்தமும் திழைத்துக்கொண்டிருந்த தமிழகத்தில் வெவ்வேறு வேத சமயங்கள் தலைதூக்கிய காலம். வடக்கில் திழைத்துக்கொண்டிருந்த இந்த வேத சமயங்கள், தெற்கில் காலூன்ற மொழியை பயன்படுத்தினர். வடமொழியை தேவபாஷை என்றும், நாகர்கள் பேசிய தமிழை மனித மொழி என்றும்  வடவர்கள் கருதியதால், தமிழ் வடமொழிக்கு இணையாகாது என்ற ஒரு கருத்து நிலவியிருக்க வேண்டும். அதை   உணர்ந்த வேத சமயத்தினர், பக்தி காலத்தின் பொழுது தமிழ் மொழியை திராவிட மொழி என்று அழைக்கத் தொடங்கி இருக்கவேண்டும். வடவர்களிடம் பஞ்சதிராவிடர்களின் மொழி தமிழ் என்றும், தமிழர்களிடம், திராவிடம் தமிழ்தான் என்றும் கூறிவிடலாம் என்றும் அவர்கள் எண்ணியிருக்கலாம். அதன் காரணத்தில்தானோ என்னவோ, நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை திராவிட வேதம் என்றும், சம்பந்தரை திராவிட சிசு என்றும் கூறத்தொடங்கினர்.

மீண்டும் ஏன் திராவிடம் என்னும் சொல் ? அது தமிழ் மொழியை குறிக்கின்றதா ?

அந்த முடிவுக்கு வருவதும் எளிதல்ல.

ராஜதரங்கிணி என்னும் 12ம் நூற்றாண்டு காசுமீரிய வரலாற்றை விவரிக்கும் நூல், அன்று வாழ்ந்த பிராமணர்கள் குடியிருந்த பகுதிகளைப் பற்றிச் சொல்லும் இடத்தில், விந்திய மலைக்கு வடக்கில் குடியிருந்த பிராம்மணர்களை பஞ்ச கௌடர்கள் என்றும், விந்திய மலைக்கு தெற்கில் குடியிருந்த பிராம்மணர்களை பஞ்ச திராவிடர்கள் என்றும் கூறுகின்றது.

"கர்நாடகாஸ்ச தைலங்கா த்ராவிடா மஹாராஷ்ட்ரகா:
குர்ஜராஸ்சேதி பஞ்சைவ த்ராவிடா விந்த்ய தக்ஷிணே
ஸாரஸ்வதா: கான்யகூப்ஜா கௌடா உத்கல மைதிலா:
பஞ்ச கௌடா இதி க்யாதா விந்த்யஸ்யோத்தர வாஸின:"

என்ற செய்யுளின்படி: கர்நாடகர், தைலிங்கர், திராவிடர், மகாராட்டியார், குர்ஜரர் என்னும் ஐந்து வகை திராவிடர்களும், சரசுவாதியார், கன்யாகுபிசர், கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து வகை கௌடர்களும் வாழ்ந்து வந்தனர் என்று அறியலாம். திராவிடர்கள் பிராம்மணர்களா? 

ராஜதரங்கிணியும், மராட்டிய காபியட்களும் (Khafiyat), பக்திகால நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துவது இதைத்தான். திராவிடம் என்னும் சொல் குறைந்தபட்சம் பக்திக்காலத்தின்பொழுதாவது தென்னிந்திய பிராமணர்களை குறிக்கும் ஒரு சொல்லாகவே இருந்திருக்கிறது. பக்தி காலத்தின் பொழுது தமிழகத்தில் பிரமாணம் காலூன்றவில்லை. 10ம் நூற்றாண்தின் இறுதியில் தொடங்கி, 14ம் நூற்றாண்டின் இறுதியில் தான் பிரமாணம் தமிழகத்தில் வலுப்பெற்றது. அதனால் 12ம் நூற்றாண்டில் திராவிட பிராமணர்கள் என்று ராஜதரங்கிணி கூறுவது தமிழக பிராமணர்களாய் இருக்க முடியாது. பக்தி  காலத்திற்கு முன் எந்த ஒரு தமிழ் நூலிலும் திராவிடம் என்னும் சொல் இடம்பெற்றதில்லை.

சரி, தமிழ் நூலில் இல்லை. வடமொழி நூலில் இருக்கின்றதா ?

நிறைய இடங்களில் இடம்பெற்றுள்ளது. மகாபாரதம், குருசேத்ரப் போரில்  பாண்டவர்களின் பக்கம் சேர்ந்து சேரர்களும், சோழர்களும், பாண்டியர்களும் திராவிடர்களும்  போரிட்டனர் என்று  கூறுகிறது. பாண்டவர்களின் ஒருவரான சகாதேவன் படையெடுத்து வந்து திராவிட, சேர, சோழ மன்னர்களை வென்றான் என்கிறது. வேறு சில இடங்களில் திராவிடர்களையும், ஆந்திரர்களையும், கேரளர்களையும் தனித்தனியே  குறிப்பிடுகிறது. இதே போல் திராவிடர்களும், கர்நாடகர்களையும் வேறு நாட்டவர்கள் என்று குறிப்பிடுகிறது.மகாபாரதம் உண்மைக் கதையோ, புனைவோ தெரியாது. ஆனால் அது, அரசியல் வாழ்க்கையை சித்தரிக்கும் நூல். அதனால் தான் நாடுகளை பற்றி கூறுகிறது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் இருந்தமைக்கு சான்றுகள் உள்ளது.அந்த மகாபாரதம், சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வெளியே இருந்த ஒரு நாடு என்றே திராவிட நாட்டை குறிப்பிடுகிறது.

இதை ராஜதரங்கிணியிலுள்ள செய்யுளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்குவது: மகாபாரத காலங்களிலும் சரி, 12ம் நூற்றாண்டிலும் சரி, திராவிடம் என்பது சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வெளியே இருந்த ஒரு நாடு தான் என்று புலப்படும். இந்த நாடு, விந்திய மலைக்கு தெற்கே இன்றைய தெலுங்கானாவிற்கும் கர்நாடகத்திற்கும் அருகே இருந்திருக்க வேண்டும். இந்த திராவிட நாட்டிலும் வரலாற்று காலங்களுக்கு முன், நாகர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களும் தமிழ்மொழி பேசியிருக்க வேண்டும்.

இந்துத்துவத்தையும், தீண்டாமையையும், சாதி சமய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்த அண்ணல் அம்பேத்கர், புராணங்களில் புதைத்திருக்கும் வரலாற்றையும், கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சியையும் ஒன்றிணைத்து, தன் நூலில் கூறுவது - ஆரியர் வருகைக்கு முன்பு, இந்தியாவெங்கிலும் நாகர்கள் பரவி வாழ்ந்தனர். அவர்கள் திராவிடம் அல்லது தமிழ் மொழியையே பேசி வந்தார். நாகர்களின் தாயகம் மராட்டியம் (மகாபாரதத்தில் குறிப்பிடபட்டிருக்கும்  திராவிட நாடு?).

இதே காலத்தில் தான், பெரியார் தீண்டாமையை எதிர்த்து போராடத்தொடங்கினார். இவரும் கால்டுவெல்லின் தவறான சொற்பயன்பாட்டிற்க்கு இரையானார். எவரை எதிர்த்தாரோ அவர்களின் பெயரிலே இயக்கம் துவங்கினார். இதுவே திராவிடம் அரசியல் கோட்பாடான வரலாற்றுச் சுருக்கம்.

இதிலிருந்து சில விடயங்கள் தெளிவாகிறது.

1. தமிழர்கள் ஒருபோதும் தங்களை திராவிடர்களாக கருதியதில்லை.
2. தமிழர் தமிழை ஒருபோதும் திராவிடம் என்று குறிப்பிட்டதில்லை.
3. வரலாற்றில் திராவிடம் என்னும் சொல் சேர சோழ பாண்டியர்கள் ஆளாத ஒரு நாட்டையோ, விந்திய மலைக்கு தெற்கில் வாழ்த்த பிராம்மண குடியிருப்பாயோ குறிக்கின்றதே அன்றி, அது ஒரு இனத்தை குறிப்பதில்லை.
4. கால்டுவெல் பயன்படுத்திய திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழிக் குடும்பத்திற்கு பொருந்தாது.
5. திராவிடம் என்னும் சொல் மொழியை குறிக்கும் இடங்களிலெல்லாம் இடம்பெற்றிருக்க வேண்டிய சொல்  தமிழ். நாகர்களின் மொழி பண்டைத் தமிழ், பண்டைத் திராவிடம் அல்ல. (Nagas spoke proto-Tamil not proto-Dravidian)

திராவிடத்திற்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழனும் திராவிடன் இல்லை. 

(குறிப்பு: வேறொரு கட்டுரையில் தமிழன் திராவிடனா என்ற கேள்வியை இன்னும் விரிவாக புராண-இலக்கிய சான்றுகளுடன் விவாதிக்கலாம்.)

மேலும் படிக்க:
1. தமிழன் திராவிடனா? - 130 கட்டுரைகள்
2. ஆரியர், திராவிடர், தமிழர் - 7 கட்டுரைகள்
3. திராவிடம் தமிழைக் குறிக்காது

இணையத்தில் இன்னும் பல அருமையா கட்டுரைகள் .உள்ளன. தமிழன், திராவிடம், என்று தேடினால் கிடைக்கும்.


யார் தமிழர்?
சரி, தமிழன் திராவிடன்  அல்ல. பின்பு அவன் யார்?

ஆதிகாலங்களில் இந்திய துணைக்கண்டம் எங்கும் பரவி வாழ்ந்த நாகர்கள் தான் தமிழர். இவர்கள் பேசிய மொழிதான் பண்டைத் தமிழ். ஆரிய இனம் என்று ஒன்று உள்ளதா, ஆரிய படையெடுப்பு உண்மையான வரலாற்று நிகழ்வா என்று கண்டறியாதபோதிலும், ஆரியம்  என்ற ஒரு மொழி குடும்பம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஐரோப்பாவிலிருந்து இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைந்தனர். இது படையெடுப்பாகவோ மக்கள் நகர்வாகவோ இருந்திருக்கக்கூடும். இந்தநகர்வு வேத காலங்களில் நடந்ததா அல்லது சிந்து நாகரிகத்தின் பொழுது நடந்ததா என்று வரையறையிட்டு கூறயியலாது. இடம்பெயர்ந்து வந்த இந்த ஆரிய மொழி பேசும் ஆரியர்கள், ஏற்பின் மூலமோ திணிப்பின் மூலமோ, ஆரிய மொழியை வடஇந்தியாவில் பரப்பினர். தென்னிந்தியர்கள் ஏனோ இந்த ஆரிய மொழியை ஏற்கவில்லை, தமிழ்மொழியையும் கைவிடவில்லை.

வரலாறு இருக்கட்டும், இக்காலத்தில் தமிழர் யார் ?

தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள், தமிழ் மொழி தாய் மொழியாக இல்லாத போதும், அதை கற்று, பேசவும் எழுதவும் தெரிந்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியர்கள், தமிழர் நலத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் உழைத்தவர்கள், தமிழர் அறத்தை ஏற்று, சாதி சமய வேறுபாடு காணாமல், அனைத்து மனிதரையும் சமமாக கருதுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் தான்.


தமிழ் தேசியத்தின் அவசியம்:
அட, வரலாறெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். திராவிடத்தால் சமூக சீர்திருத்தம் நடந்திருக்கிறது அல்லவா? தீண்டாமை ஒழிந்திருக்கிறது. பெண்கள் முன்பைவிட அதிக சுதந்திரமும், உரிமையும் பெற்றிருக்கின்றனர். இதெல்லாம் நல்லவைகள் தானே? பின்பு எதற்கு தமிழ் தேசியம் ?

திராவிடத்தால் நன்மைகள் விழைந்திருக்கின்றன என்ற கருத்தை மறுக்கமுடியாது தான்.ஆனால் அதே திராவிடத்தால் நாம் இழந்தவைகள் பல. தமிழகத்தின் வளங்களும், தமிழர் கலை, அறிவியல், மருத்துவம், தமிழர் அறம், தமிழ் மொழி அவற்றுள் சில. மேலும், தமிழர்கள் திராவிடர்கள் என்று கருதும் தெலுங்கர்களோ, கன்னடர்களோ, மலையாளிகளோ அவர்களை திராவிடர்கள் என்று கருதியது கிடையாது. அவர்கள் தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும், மலையாளிகளாகவுமே உள்ளார். பின்பு தமிழருக்கு மட்டும் எதற்கு திராவிடம்?

தமிழ் மூவேந்தர்களாக கருதப்படும் சேர சோழ பாண்டியர்களின், இருவர் 1500 ஆண்டுகள் தென்னிந்தியாவை  ஆண்டனர். ஆனால் இருவராலும் ரோமா பேரரசை போலவோ, மங்கோலிய பேரரசை போலவோ, பெர்சியப் பேரரசை போலவோ,  மௌரியப்  பேரரசை போலவோ ஒரு பேரரசை நிறுவ இயலவில்லை. இதற்குக் காரணம் ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததே. ஒற்றுமை இல்லாத இவர்களால் ஒருவரை மாற்றி ஒருவர் அழிக்க முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. இன்றைய தமிழர்களும் சாதி மாதங்களில் பிரிந்து ஒற்றுமையின்றி வாழ்கின்றனர். இவர்களை தமிழர்களாய் இணைக்க தமிழ்  தேசியம் அவசியம்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே. வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடியின் கலை, இலக்கியம், வரலாறு, நாகரிகம், பண்பாடு, மொழி, அறிவியல் ஆகியவற்றை மீட்டெடுக்கவும், சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் வளங்களை காக்கவும் தமிழ் தேசியம் அவசியம்.

தமிழ் பேரரசை நிறுவமுடியாமல் போனாலும், தமிழன் வாழ்ந்த  வரை தன் அடையாளத்தை இழக்காமல் வாழ்ந்தான் என்று கூறுவதற்கு தமிழ் தேசியம் அவசியம்.


கொள்கைகள்:
தமிழ் மொழியின் தொன்மை, தமிழர் அடையாளம், தமிழ் தேசியத்தின் வரலாறு மற்றும் அவசியம் குறித்து கண்ட நாம், தமிழ் தேசிய கொள்கைகள் பற்றி இனி காண்போம். ( குறிப்பு: இது எந்த ஒரு  தமிழ் தேசிய இயக்கத்தையே, அரசியல் காட்சியையோ முன்னிறுத்த இயற்றப்பெற்றதல்ல. தமிழ் தேசிய இயக்கங்களும், கட்சிகளும் இதில் சிலவற்றை ஏற்றுக்கொண்டோ, நிராகரித்தோ இருக்கலாம். அந்த கருத்துக்கள் ஏற்புடையதா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்).

1. தமிழுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை. ஆட்சி மொழியாக தமிழ். அரசு துறைகள் அனைத்திலும் தமிழ். தமிழ் தெரிந்தவர்க்கே அரசு வேலை. தமிழகத்தில் இயங்கும் மத்திய-மாநில அரசுத் துறைகளில், தமிழுக்கு முதலிடம். விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்களிலும், மத்திய-மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சேவைகளிலும் தமிழுக்கு இடம்.

2. மாநில அரசு நடத்தும் அனைத்து கல்விக்கூடங்களிலும் தமிழே பயிற்று மொழி. இங்கு கல்வி இலவசம். மத்திய அரசு  நடத்தும் அனைத்து கல்விக்கூடங்களிலும் தமிழ் மொழி கட்டாயம். ஆங்கிலம் இரண்டாவது மொழி, அனைத்து பள்ளிகளும் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்பிக்கவேண்டும். இந்த இரண்டு மொழிகளை தவிர எவரும் எந்த மொழியையும் தங்களின் விருப்பப்படி கற்கலாம். தடையேதும் இல்லை.

3. தமிழர் நாகரிகம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், இலக்கியம் போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள தனித்துறை. இந்த ஆய்வுகளை மேற்கொள்ள தனிநபர்களுக்கு ஊக்கம் .

4. தமிழர் கலைகளான பறையாட்டம், தெருக்கூத்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பரதம், காவடியாட்டம் போன்றவற்றை ஊக்குவிக்க கலைவிழாக்கள். தமிழரின் வீர விளையாட்டுகளான சிலம்பம், களரி போன்றவற்றை கற்க அரசின் சார்பில் சிறப்பு கூடங்கள். ஊர்தோறும் சல்லிக்கட்டு.

5. எல்லா மத ஆலயங்களிலும் தமிழ் மொழி வழிபாடு. வேறு மொழியில் வழிபடும் ஆலயங்களுக்கு வரிவிலக்கு கிடையாது. ஆலயங்களில் சாதித் தீண்டாமை அறவே கூடாது. தன்னார்வ தொண்டு நிருவனங்களுக்கு மட்டுமே மொழிச்சார்பின்றி வரிவிலக்கு.

6. இயற்கை வழி வேளாண்மைக்கு முன்னுரிமை. இயற்கை வழி வேளாண்மை செய்வோர்க்கு சலுகைகள். கால்நடைககளை இயற்கை முறையில் வளப்பவர்களுக்கும் சலுகைகள்.

7. ஆதித்தமிழர்கள் வகுத்த நீர்மேலாண்மை. நீருக்காக கையேந்தும் நிலையில் மாற்றம்.

8. சந்தை பொருளாதாரமாக இருக்கும் தமிழகம், உற்பத்தி பொருளாதாரமாக மாற்றம்.

9. எல்லா மனிதருக்கும் (தமிழர்களாலும், தமிழல்லாதோர்க்கும்) சம உரிமை. 

10. அண்டை மாநிலங்களுடன் நட்புறவு. நம் வளங்களையும் அவர்கள் வளங்களையும் தேவைக்கேற்றவாறு பகிர்தல்.

11. ஈழத்திலும் முழு தன்னாட்சி.

12. தமிழக வளங்களை முதலாளிகள் சுரண்டத் தடை. தமிழ் தேசியம் எல்லா உயிரினங்களுக்கும், உயிரற்றவைக்குமான தத்துவம். தமிழ் தேசியம் நீர், நிலம், காடு, மலை, இவர்களின் மீது வாழும் காக்கை, குருவி, தேனீ, யானை, புலி, சிங்கம் மற்றும் மனிதரை சமமாக கருதும் தத்துவம்.

13. தமிழர் நாகரீகங்களை ஆராய தனி தொல்லியல் அகழ்வாராய்ச்சித் துறை, நிதி ஒதுக்கீடு.

14. சங்க காலத்தை போல் மன்றம் அமைத்து தமிழ் வளர்க்க வழிவகை. தமிழ் மொழி ஆராய்ச்சியிலும் வளர்ச்சியிலும் உதவுபவர்க்கு விருதுகள்.

தமிழ்த்தேசிய தத்துவம் தன்னாட்சித் தத்துவம். தமிழர் உரிமைகளையும், தமிழர் வளங்களையும், தமிழ் மொழியையும் காக்கும் தத்துவம். தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்படும் போதும், வளங்கள் திருடப்படும் போதும், மொழி அழிக்கப்படும் போதுமட்டுமே அது தனிநாடு கோரிக்கையாக மாறும். 

தமிழ்த்தேசியத்தின் கருத்தியல் எதிரி ஒற்றையாட்சியும்  (central system of governance), திராவிடமும். ஒற்றையாட்சி தமிழர் அடையாளங்களையும், திராவிடம் தமிழ் மொழியையும் அழிக்கும் தத்துவங்கள். இதற்கு மாற்ருத் தத்துவங்களாக, கூட்டாட்சியையும் ( federal system of governance), தமிழையும் முன்னவைப்பது தான் தமிழ்த்தேசியம்.


முடிவுரை:
சாதி மாதங்களாய், ஊர் பகுதிகளாய், குடிக்கு அடிமையாகி, உரிமையையும், அடையாளத்தையும் தொலைத்து, பிறந்த மண்ணில் அகதிகளாய் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்களின் உரிமைகளையும் அடையாளத்தையும் மீட்டெடுத்து, தமிழ் மொழியின் புகழை நிலைநாட்டவே தோன்றிய தத்துவம் தமிழ் தேசியம். இது குறிகியவட்டம் என்றும், இனவெறி என்றும் விமர்சனங்கள் இன்று எழும். இருந்தபோதிலும், இந்தத்தத்துவம் வெல்லும் நாள் ஒன்றும் வரும்.


ஒற்றாட்சியின் அடிமையாய் திராவிட போதையில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களை விழித்தெழுப்ப மற்ற தமிழர்கள் முன்னெடுக்கும் ஒரு விடுதலை போராட்டமே தமிழ் தேசியம்.

விழித்திடு தமிழா. நீண்டகாலம் தூங்கிவிட்டாய். தமிழனாய் இருப்பதற்கு பெருமைகொள்.

நன்றி.

Comments

asokan said…
நாம் தமிழர் கொள்கையிலிருந்து நீங்கள் எவ்வாறு வேறுபடுகிறீர்கள்? sivaasokan@gmail.com.com என்ற மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
Unknown said…
இதில் எல்லாமே சரி.
ஆனால் சங்க காலம் தொட்டு தமிழர் போற்றி வணங்கி வந்த வழிபாடு எங்கே?
முருகன்,திருமால்,கொற்றவை,இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்கள் எங்கே?
இராவணன் வணங்கிய சிவன் எங்கே?
இந்த தமிழர் மதம் இல்லாமல் எப்படி தமிழ் தேசியம்?

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter