ஈழம் - இனப்படுகொலைநாள் - மே18

 தலையில்லாத உடம்பின்
கால்களை பற்றிக்கொண்டு
அம்மா என்றழைக்கத் தெரியாமல்
அழுதான் ஒரு சிறுவன்.

கை தவறி விழுந்து உடைந்த
கண்ணாடி பொம்மை போல்
துண்டு துண்டாய் சிதறிக்
கிடந்தாள் ஒரு சிறுமி.

நரிகளும் நாய்களும் தின்றபின்
விட்டுச் சென்ற மிச்சமாய்
மார் இரண்டும் அறுபட்டு
இறந்தாள் ஒரு மகள்.

ஆடையும் உயிருமின்றி
சடலமாக கிடந்தவளின்
உடலை தன் குருதியால்
மூடினான் ஒரு அண்ணன்.

பத்து மாதம் உயிரைச் சுமந்து
பெற்றெடுத்த பிள்ளையை
பெரும் பிணக் குவியலுக்குள்
தேடினாள் ஒரு தாய்.

பிறக்கவிருந்த பிள்ளை
இறந்து விட்டதா என்று
இரத்தம் படிந்த கைகளால்
வயிற்றைத் தடவினாள்
மற்றோரு தாய்.

ஆண்டுகள் பல உடனிருந்தவளை
அரக்கர்கள் பலர் சூறையாட
சாகவும்கூட முடியாமல்
தவித்தான் ஒரு கணவன்.

மணந்தவனை மறுநொடி இழந்து
மண்ணில் புரண்டு மாரில் அடித்து
மரித்துப் போக மனம்நொந்து
வேண்டினாள் புது மனைவி.

தன்னை தகிக்க வேண்டியவர்களை
தான் தகிக்க நேர்ந்ததை எண்ணி
தனியாய் தடியை பிடித்திக்கொண்டு
தார்பாயில் தன் மக்களை கிடத்தி
இழுத்தார் ஒரு முதியவர்.

உரிமைக்காக உடைமைகளை இழந்து
உலகமே எதிர்த்து நின்ற போதிலும்
உதிரமும் ஊனும் உயிரும் சிந்தியும்
அழியும் தருவாயில் ஒரு இனம்.

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter