தமிழா !

எரிந்த உடலும், எரித்த கனலும்,
அணைந்த பின்பு எஞ்சும் தணலும்,
அறிந்த உறவும், மரித்த உயிரும்,
இணைந்து பிறந்த இயற்பெயரும்
எதுவும் உனக்கு சொந்தமில்லை,
உடைமை என்று ஒன்றுமில்லை.

தெரிந்த உருவம் மறைந்த பிறகு,
தெளிந்த சிந்தனை மங்கும் பொழுது,
கற்றதது பெற்றது கொண்டது வென்றது,
வந்தது போனது கண்டது எங்கது ?

பயின்ற பல்கலை, மணந்த வல்லவை,
ஈன்ற மதலை, அவள் வாய் மழலை,
ஆறடி ஆடி ஓய்கின்ற பொழுது,
நூறடி ஓடி கானலாய் போனது.

அன்னையும் தந்தையும் தந்த இவ்வுருவம்,
அவரையும் விழுங்கும் மாயை இவ்வுலகம்,
மண்ணையும் உன்னையும் தந்த நல்லிறையும்,
மின்னும் வண்ண விண்ணகம் சென்றொழியும்.

நிலையற்ற உலகில் வாழும் சில காலம்,
தேடி நாம் அலைவது ஓர் அடையாளம்.
நல்லறமும் இனமும் பைந்தமிழ்நாடும்,
குறளுங் கொடுத்த மொழியே அடையாளம்.

கல்தோன்றி மன்தோன்றா காலத்தே,
வாளோடு முன்தோன்றிய குடியை,
குழிதோண்டி இந்தியன் புதைக்க,
சங்கம் வளர்த்த தமிழ்மொழியை
ஆங்கிலமும் இந்தியமும் சேர்ந்து
சங்கொலித்து பாடையிலேற்ற,
தமிழ் தெரியாதென்று மார்தட்டும்,
மடையனாய் போனான் தமிழன்.

ஆங்கிலமும் இந்தியமும் பெருமை,
தமிழும் குறளும் இனமும் சிறுமை,
கருமையின் அருமை மறந்து வெறுமை,
அறத்தை கழுவில் ஏற்றும் நிலைமை.

மனிதனை மிதித்து மனிதன் வாழ,
பணத்தை மதித்து மனிதம் தாழ,
விடும், காடும், ஓடும் காரும்,
உயிரை விட உயந்ததாய்ப் போக,
தானமும் தருமமும் குறைந்தது,
இனமும் ஒற்றுமை இழந்தது.

அறத்தை மறந்தாய், இனத்தை மறந்தாய்,
மொழியை மறந்தாய், வரலாறு மறந்தாய்,
பஞ்சமும் பட்டினியும் ஒன்றும் இன்றியும்,
பணத்திற்காக நம் அடையாளத்தை
விற்றுவிட்டாயே தமிழா !
- இளவழுதி

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter