குறிஞ்சித் தலைவன்

பித்தற்கொரு சத்தித் திருமகன்
சித்தைதொட தித்தித் தறுமுகன்
முத்திப்பெரு வித்தைக் கொருகுரு சரவணமே...

முற்றுக்கரு வற்குத் திருமறை
மற்றும்வுரு வற்றத் தொருநிலை
கற்பித்துமு ணர்த்தித் திருவருள் புரிந்தவனே...

அட்டத்திசை சுற்றித் திரிந்தெலி
அத்தப்பதம் பற்றிப் புகுந்திட
வெற்றிக்கனி யெட்டத் தவறிய கனிமுகனே...

சுட்டப்பழம் வைத்துக் கிழவியின்
பிற்பட்டத றுத்துக் குணமகள்
திக்கெட்டிணை யற்றப் புகழ்பெறச் செய்தவனே...

மொட்டைக்கிரி பட்டுச் சரிந்திட
நத்துப்பறை கத்திக் கரைந்திட
பித்துக்குளி புத்திப் பெறவரங் கொடுத்தவனே...

மக்குங்கரி யொத்தப் பதுமனை
குத்திக்கொலை யிட்டுக் குலவழி
எட்டிப்பகை விட்டுச் செலதுணை யிருந்தவனே...

சொற்பர்கறி சொர்க்கத் தமரனின்
தத்தைக்கினி யத்திக் கரத்தினை
பற்றிப்பல பத்தர்த் தொழதிட குன்றுமொன்றே...

முட்கற்றொடு தித்துக் கழனியில்
நித்தம்மமு திட்டுக் கடம்பனின்
சித்தம்நிறைந் திட்டக் கனிக்கொரு திருத்தணியே...

நத்தைப்பல றுத்தப் புலவரும்
நித்தப்பதம் பற்றித் தமிழனில்
பத்துப்பல வைத்துத் துதித்தத் தவப்பயனே.

குறிப்பு: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நூலில் இடம்பெற்றுள்ள "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்ற பாடலின் ராகத்தில் புனையப்பட்டது.

உரை:

பித்தர்க்கு ஒரு சக்தி திருமகன் - சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தோன்றிய முருகனே (சுந்தரமூர்த்திநாயனார் இறைவனை "பித்தா பிறைசூடி" என்றழைத்ததை நினவுருக).

சித்தை தொட தித்தித்த அறுமுகன் - ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களுடன் வளர்ந்து, அன்னை பார்வதி  அன்போடு அணைக்க ஆறுமுகம் ஆனவனே.

முத்தி பெரும் வித்தைக்கு ஒரு குரு சரவணமே - முத்தி பெறுவதற்கு ஞானகுருவாக இருப்பவனே.

முற்றுக்கும் அருவர்க்கு திருமறை - எல்லா உயிர்க்கும் உயிராய் விளங்கும் சிவபெருமானுக்கு நான்கு வேதங்களையும் 

மற்றும் உருவற்ற ஒரு நிலை - அண்டம் தோன்றுவதற்கு முன் ஓங்காரமாய் நிலைத்திருந்த உருவமற்ற ஓம் எனும் ஒலியையும் 

கற்பித்து உ ணர்த்தி திருவருள் புரிந்தவனே -கற்பித்து இறைவனுக்கே அருள் செய்து தகப்பன்சாமி என்று பெயர் பெற்றவனே.

அட்டத்திசை சுற்றித் திரிந்து - மயில் மீதேறி எட்டுத் திசைகளையும் சுற்றி வந்த பின்னும் 

எலி அத்தன்  பதம் பற்றிப் புகுந்திட - எலி வாகனத்தில் விநாயகப்பெருமான் அம்மை அப்பனை உலகமேனக்கருதி சுற்று வந்தமையால் 

வெற்றிக்கனி எட்டத் தவறிய கனிமுகனே - உலகம் சுற்றிவரும் போட்டியில் தோல்வியுற்று நாரதமுனி கொண்டு வந்த கனியை பெறத்தவறி பழனிமலையில் ஆண்டியாய் நின்றவனே.

சுட்டப்பழம் வைத்துக் கிழவியின் - சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா என்று அவ்வையிடம் கேட்டு. அவள் சுடாதபழம் கேட்க, மண்ணில் புரண்ட பழத்தை எடுத்து அவள் ஊத, பழம் சுடுகிறதா என்று கேட்டு 

பிற்பட்டது  அறுத்துக் குணமகள் - பிற்பட்டுப்போன அவ்வையின் ஆணவத்தை அழித்து, அவளை குணம் போருந்தியவளாக்கி

திக்கு எட்டு இணையற்ற புகழ் பெறச் செய்தவனே - எட்டுத்திசையும் என்றும் நிலைக்கும் மங்காத புகழ் தேடித் தந்தவனே.

நத்துப்பறை கத்திக் கரைந்திட - போர்க்களத்தில் சங்கும் பறையும் முழங்கிட 

மொட்டை கிரி பட்டுச் சரிந்திட -  அரக்கர்களின் குல மலையான வட்ட வடிவங்கொண்ட கௌரஞ்ச மலை, வேல் பட்டவுடன்  போடிபட(தாரகாசுரன் என்னும் அரக்கனே கௌரஞ்ச மலையாக நின்று தன் அண்ணன் ஆண்ட மகேந்திரகிரி செல்லும் பாதையை மறைத்திருந்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது).

பித்துக்குளி புத்தி பெற வரம் கொடுத்தவனே - சிறை வைத்திருந்த வானவரை விட்டுவிட்டால் மன்னிப்பு என்ற வரம் கொடுத்தவனே.

மக்கும் கரி ஒத்தப் பதுமனை - சிவமைந்தன் கையாலன்றி வேறொருவர் கையாலும் இறப்பில்லை என்று சிவபெருமானிடம் வரம் பெற்ற சூரபதுமனை(சூரபதுமனை கொல்வதற்கே முருகன் உருவாக்கப்பட்டார் என்கிறது கந்தபுராணம்)

குத்திக் கொலை இட்டுக் - வேல் கொண்டு கொன்று, மயிலாகவும் சேவர்க்கொடியாகவும் மாற்றிக்கொண்ட வடிவேலனே 

குலவழி பகை விட்டுச் எட்டி செல்ல துணை இருந்தவனே - பகையனைத்தும் எட்டி ஓட வழிவகுத்தவனே.

சொற்பர் அறி சொர்க்கத்து அமரனின் தத்தைக் இனி - சாதாரண மனிதரும் அறிந்திருந்த சுவர்க்கத்து மன்னன் இந்திரனின் மகள், கிளியைவிட இனிமையான குரலும் அழகும் கொண்ட  

அத்திக் கரத்தினை பற்றிப் பல பக்தர் தொழதிட குன்று ஒன்றே - தெய்வயானையின்(இந்திரனின் யானை ஐந்திரி வளர்த்தவளே இவள் என்பது கருத்து) கரம் பற்றி பக்தர்கள் தொழுதிட காட்சி அளித்த மலையே திருப்பரங்குன்றம்.

முட்களோடு உதித்து கழனியில் - இந்த மண்ணுலகில் வனத்தில் வள்ளியாய்(அரிக்கும் இலக்குமிக்கும் ஒரு பிறப்பில் பிறந்து, மறு பிறப்பில் மானிட வடிவம் கொண்டு குறவர் குலத்தில் வளர்ந்தவளே வள்ளி என்பது கருத்து) பிறந்து  

நித்தமும்  அமுதிட்டுக் கடம்பனின்  - தினமும் முருகனைத் தொழுது, அவனைக் காதலித்து 

சித்தம் நிறைந்திட்டக் கனிக்கொரு திருத்தணியே - தன காதலால் அவன் சித்தம் புகுந்து அவனையே காந்தர்வ மணம் புரிந்து நின்ற மலையே திருத்தணிகைமலை.

நத்தை பல அறுத்தப் புலவரும்  - சங்கை அறுக்கும் குலத்தில் பிறந்த நக்கீரரும்(இவரே பாண்டியன் சபையில் சிவபெருமானுடன் வாதிட்டவர்)

நித்தப்பதம் பற்றித்  - இறப்பில்லாத முருகன் கழல்களை குறித்து 

தமிழனில் பத்து பல வைத்துத் துதித்தத் தவப்பயனே - தமிழில் திருமுருகாற்றுப்படை படைத்து(இவர் இறையனார் அகம்பொருள் என்னும் நூலையும் படைத்துள்ளார்) துதிக்கப்பட்ட இறைவனே நின் புகழ் வாழ. 

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter