தமிழும் சிவமும்

அனுவாய் அசைவாய் அலையாய்,
அறமாய் அறிவாய் அருளாய்,
அவளாய் அவனாய் அமரனாய்,
அணியாய் அகமாய் அமுதாய்,

ஆரகமாய் ஆருவமாய் ஆக்கமுமாய்,
ஆதியனாய் ஆதிரனாய் ஆழியனாய்,
ஆதவனாய் ஆலவனாய் ஆதிரையாய்,
ஆயிரமாய் ஆய்தமாய் ஆத்திசூடியாய்,

இமையாய் இணைப்பாய் இயக்கமாய்,
இயல்பாய் இணையாய் இருளாய்,
இன்பனாய் இனியனாய் இறப்பிலியாய்,
இசையாய் இயலாய் இலக்கணமாய்,

ஈச்சமாய் ஈட்டமாய் ஈர்ப்பாய்,
ஈகையாய் ஈரமாய் ஈடகமாய்,
ஈயுவனாய் ஈடிலியாய் ஈறிலானாய்,
ஈட்டியாய் ஈழமாய் ஈரடியாய்,

உருவாய் உடலாய் உகமாய்,
உணர்வாய் உண்மையாய் உய்கையாய்,
உரகனாய் உக்கிரனாய் உமையவனாய்,
உரையாய் உவமையாய் உழிஞையாய்,

ஊர்மியாய் ஊதையாய் ஊதிகையாய்,
ஊகையாய் ஊட்டமாய் ஊன்றாய்,
ஊனிலியாய் ஊரிலியாய் ஊழிமுதல்வனாய்,
ஊராய் ஊசலாய் ஊடலாய்,

எசமாய் எலும்பாய் எழுகாய்,
எழிலாய் எழுமையாய் எண்ணமாய்,
என்குணனாய் எருதேறியாய் எரியோனாய்,
எண்ணாய் எழுத்தாய் எதுகையாய்,

ஏடாய் ஏரடமாய் ஏடகமாய்,
ஏற்றமாய் ஏடையாய் ஏக்கமாய்,
ஏகம்பனாய் ஏறெறியாய் ஏழுலகாளியாய்,
ஏலாதியாய் ஏரம்பம்மாய் ஏழிசையாய்,

ஐம்புலனாய் ஐம்பொன்னாய் ஐம்பூதங்களாய்,
ஐயமாய் ஐயுணர்வாய் ஐந்துணவாய்,
ஐந்தாடியாய் ஐம்முகனாய் ஐவண்ணன்னாய்,
ஐந்திணையாய் ஐந்திரமாய் ஐங்காப்பியங்களாய்,

ஒளியாய் ஒலியாய் ஒருமிப்பாய்,
ஒண்மையாய் ஒட்பமாய் ஒழுக்கமாய்,
ஒப்பிலியாய் ஒருபொருளாய் ஒருநினைவாய்,
ஒற்றாய் ஒருபதுவாய் ஒலியந்தாதியாய்,

ஓடையாய் ஓட்டமாய் ஓகமாய்,
ஓர்ச்சியாய் ஓகையாய் ஓசமாய்,
ஓங்கலாய் ஓரியராய் ஓங்காரமாய்,
ஓசையாய் ஓரெழுத்தாய் ஓரினமாய்,

அகரமாய் ஆதாரமாய் இறையாய்,
ஈசனாய் உயிராய் ஊக்கமாய்,
எந்தையாய் ஏந்தலாய் ஐயனாய்
திகழும் தமிழே சிவமோ?
- ஜெயஸ்ரீ, இளவழுதி

பாடல் குறிப்பு: உயிரெழுத்துகளில் 'அ' முதல் 'ஓ' வரை உள்ள பதினொன்று எழுத்துகளால் தொடங்கும் சொற்களைக்கொண்டு பதினொன்று பதிகங்களாய் அமைந்துள்ள இந்த பாடலில், ஒவ்வொரு பதிகத்தின்  முதல் வரி இயற்கை, அறிவியல் சார்ந்த சொற்களையும், இரண்டாம் வரி குணங்கள், இயல்புகள் சார்ந்த சொற்களையும், மூன்றாம் வரி சமயம் சார்ந்த சொற்களையும், நான்காம் வரி தமிழ் மொழி சார்ந்த சொற்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

The first poem my wife and I co-wrote. The poem consists of 11 stanzas with each stanza containing only words starting with a particular vowel (Tamil has 12 vowels). The first line of each stanza is made up of elements relating to nature, the second with elements of traits, the third with elements of religion and faith, and the fourth is made up of elements from Tamil literature and culture.

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter