மயக்கம்

பாடையில் வைத்து
தாடையைக் கட்டி
மஞ்சலரிசி இட்டு
காட்டுக்குச் செல்கையில்
சவமென்றும் பிணமென்றும்...

முடி குறைந்து
முதுகு வளைந்து
கர்வம் தொலைத்து
மூலையில் கிடக்கையில்
கிழமென்றும் குருடென்றும்...

கருமை வெளுத்து
பொறுமை கண்டு
பெருமை கொண்டு
கடந்ததை நினைக்கையில்
பாட்டனென்றும் பாட்டியென்றும்...

வம்சம் வாழ
தினம் பிழைத்து
நிற்காது உழைத்து
பணம் சேர்க்கையில்
வீரனென்றும் சூரனென்றும்...

இனம் தழைக்க
மனம் உணர்ந்து
கரம் பிடித்து
காதல் கொள்கையில்
அப்பனென்றும் அம்மையென்றும்...

மீசை துளிர்க்க
நட்புக் கொண்டு
உள்ளம் கிளர்ந்து
துள்ளித் திரிகையில்
குமரனென்றும் இளைஞனென்றும்...

பள்ளிக்குச் சென்று
பாடம்பல பயின்று
பண்புகள் அறிந்து
புகழ்பல பெற துடிக்கையில்
சிறுவனென்றும் சிறுமியென்றும்...

நிலத்தில் கைவைத்து
மெதுவாய் தவழ்ந்து
உலகம் மறந்து
கவலையின்றிச் சிரிக்கையில்
குழகனென்றும் குழந்தையென்றும்...

வெறுமையில் உண்டாகி
கருமையில் தத்தளித்து
உதிக்கக் காத்திருந்து
உலவித் திரிகையில்
கருவென்றும் உயிரென்றும்...

உருவற்ற ஒன்றை
நிலையற்ற மாந்தர்
விதியொன்று தந்து
பொய்யைக் கண்டு
பொய்யாய் மெய்யெனக் கருதி...

சிவத்தைத் துறந்து
துயரம் கொண்டு
துவண்டு துவண்டு
பிணமாய் வாழும்
இந்த ஞாலமொரு மயக்கம்.
- இளவழுதி

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter